என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள் - குவைத்திலிருந்து கண்ணீர் மல்க ஆந்திரப் பெண் கோரிக்கை


அமராவதி: குவைத்தில் வீட்டு உதவியாளராக பணிபுரியும் ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது முதலாளிகள் சித்ரவதை செய்தவதாக குற்றம் சாட்டியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த இந்தப் பெண், தனக்கு நேர்ந்த கொடுமையை வீடியோவாகப் பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

காக்கிநாடா மாவட்டத்தின் கந்தேபள்ளி யல்லமெல்லி கிராமத்தைச் சேர்ந்த காரா குமாரி, ஜக்கம்பேட்டா ராமாவரம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவர் இறந்த பிறகு, அவர் தனது இரண்டு மகள்களையும் ஒரு மகனையும் தனியாக கவனித்து வந்தார். குழந்தைகளை வளர்க்க வருமானம் போதுமானதாக இல்லை என்பதால், பாலகொல்லுவைச் சேர்ந்த எம்.சுதாகர் என்ற முகவரின் உதவியை குமாரி நாடினார். அவரின் உதவியால் குவைத்தில் வீட்டு வேலை செய்ய ஏழு மாதங்களுக்கு முன்பு குமாரி குவைத்துக்கு சென்றார். அவர் குழந்தைகளை தனது தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு சென்றார்.

ஆனால், குவைத்தில் குமாரியின் முதலாளிகள் அவருக்கு உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தலை அளித்துள்ளனர். உணவு கொடுக்காமல் கொடுமை செய்த அவர்கள், அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் அளித்துள்ளனர். இதுதொடர்பாக அவர் தனது உறவினர்களுக்கு வீடியோவை அனுப்பியுள்ளார். காரா குமாரி வெளியிட்ட கண்ணீர் வீடியோவில், "அவர்கள் எனக்கு சரியான உணவு கொடுக்கவில்லை, அவர்கள் என்னைக் கொல்ல முயற்சிக்கிறார்கள், தயவுசெய்து என்னைக் காப்பாற்றுங்கள், என்னை என் குழந்தைகளிடம் திருப்பி அனுப்புங்கள்." என்று கோரியுள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி காக்கிநாடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரா குமாரியை மீட்டு இந்தியாவிற்கு பாதுகாப்பாக அழைத்துவர விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

x