உதகையில் ஏலச் சீட்டு நடத்தி ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி உள்பட 4 பேர் கைது


நீலகிரி: உதகையில் ஏல சீட்டு நடத்தி ரூ.36 லட்சம் மோசடி செய்த வழக்கில் தம்பதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை கீழ் தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்தவர் குமார் (51). இவருடைய மனைவி லதா (46). இவர்களுடைய மகன் ராகுல் (23). குமார் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக அந்த பகுதியில் தனது தம்பியும், ஆட்டோ ஓட்டுநருமான சகாதேவன் என்பவருடன் இணைந்து ஏல சீட்டு நடத்தி வருகிறார். இந்த ஏல சீட்டு நிறுவனம் பதிவு செய்யப்படவில்லை. குமாரின் மனைவி மற்றும் மகன் ஆகியோர் ஏல சீட்டு நடத்த பொதுமக்களிடம் பணம் கொடுக்கல் வாங்கல் உட்பட்ட பணியை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடைசியாக 50 பேர் அடங்கிய ரூ.1.50 லட்சம், 25 பேர் அடங்கிய ரூ.1.35 லட்சம் மற்றும் 35 பேர் அடங்கிய ரூ.1.05 லட்சம் ஏல சீட்டு நடத்தினார். இந்த சீட்டு தொகையை வேறு உபயோகத்துக்கு குமார் மாற்றிவிட்டதால் அவரால் வாடிக்கையாளர்களுக்கு பணம் கொடுக்க முடியவில்லை. இதனால் உதகை தலையாட்டுமந்து பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் மோகன்குமார் உட்பட பலர் இது குறித்து காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் இந்த வழக்கு பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து டிஎஸ்பி பாஸ்கர், ஆய்வாளர் யமுனாதேவி, உதவி ஆய்வாளர் ஜார்ஜ், தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் 20பேர் கொடுத்த புகாரில் இவர்கள் ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் பலர் புகார் கொடுத்துக் கொண்டு இருப்பதால் மோசடித் தொகை ரூ.50 லட்சத்துக்கும் மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத்தொடர்ந்து குமார் உட்பட 4 பேரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். சீட்டு மோசடி புகாரில் தம்பதி உட்பட நான்கு பேர் கைதான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x