பெங்களூரு: படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் இயக்குநர் பரத் நாவுண்டா மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பிரபல தொலைக்காட்சி நடிகர் தாண்டவ் ராம் என்று அழைக்கப்படும் தாண்டஸ்வாரா கைது செய்யப்பட்டுள்ளார்.
‘ஜோடி ஹாக்கி’ மற்றும் ‘பூமிகே பந்தா பகவந்தா’ போன்ற தொலைக்காட்சி தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த தாண்டவ் ராம், ‘முகில்பேட்’ இயக்குனரான பரத் நாவுண்டாவிடம் ரூ. 6 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ‘தேவனாம்பிரியா’ என்ற கன்னட-தெலுங்கு சீரியலுக்காக தாண்டவ் ராம், இந்த பணத்தை முதலீடு செய்தார். அதில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்தார்.
இந்த தொடரின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாக நடந்து கொண்டிருந்தது, சமீபத்தில் தடைபட்டது. இதனால், தாண்டவ் ராம் தனது பணத்தை பரத் நாவுண்டாவிடம் கேட்டுள்ளார்.
இந்த சூழலில் பெங்களூருவில் உள்ள தயாரிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இந்த விவகாரத்தில் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தாண்டவ் ராம் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியைப் பயன்படுத்தி பரத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆனால்,குறி தவறி துப்பாக்கி தோட்டா சுவரில் மோதியது.
இதனையடுத்து தாண்டவ் ராம் மீது பிஎன்எஸ் பிரிவு 109ன் கீழ் கொலை முயற்சி குற்றத்தில் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.