விருதுநகர்: காரில் கடத்திவரப்பட்ட 450 கிலோ ரேசன் துவரம் பருப்பு பறிமுதல்- 3 பேர் கைது


விருதுநகர்: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 450 கிலோ ரேசன் துவரம் பருப்பு மூட்டைகளை திருச்சுழி அருகே இன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து திருச்சுழி வழியாக ரேசன் துவரம் பருப்பு கடத்திச் செல்லப்படுவதாக விருதுநகர் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குக் ரகசிய தகவல் கிடைத்தது. அதையடுத்து, எஸ்.ஐ. அழகுபாண்டியன் தலைமையிலான போலீஸார் இன்று காலை திருச்சுழி சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ராமநாதபுரம் சாலையில் இருந்து திருச்சுழி வழியாக சந்தேகத்திற்கிடமாக வந்த சுமோ ஒன்றை நிறுத்தி போலீஸார் சோதனை நடத்தியபோது, அதில் ரேசன் துவரம் பருப்பு கடத்திவந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு ரேசன் துவரம் பருப்பு கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள புனவாசலைச் சேர்ந்த திருமுருகன் (32), திருபாண்டி (25), அஜித் (25) ஆகியோரை கைது செய்தனர். மேலும், கடத்திவரப்பட்ட 450 கிலோ ரேசன் துவரம் பருப்பு மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தி காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

x