மதுரை: ஆன்லைன் வர்த்தக மோசடி வழக்கில் மேலும், மதுரையைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் சர்வதேச பங்கு சந்தையில் ஆன்லைன் வர்த்தக முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ரூ.96.57 லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது குறித்து மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து,மோசடியில் தொடர்புடைய நபர்களை தீவிரமாக தேடினர்.
இது தொடர்பாக திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சேக் தாவூத் மகன் சீனி முகமது, திருச்சி உறையூர் லியாத் அலி மகன்கள் இப்ராகிம், அசாரூதீன், திருச்சி ரத்தினம் நகர் அப்துல் நசீர் மகன்கள் முகமது சபீர், முகமது ரியாஸ், தஞ்சாவூர் அய்யம்பேட்டை சக்கரப்பள்ளி முகமது தாஜீதீன் மகன் முகமது மர்ஜூக் ஆகியோர் கடந்த 12-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை மேலூரைச் சேர்ந்த இப்ராகிம்ஷா மகன் அப்துல் ரகுமான், தெற்குவாசல் மெகமதியார் 2-வது தெருவைச் சேர்ந்த அலியார் மகன் அப்துல் காதர் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து சிம்கார்டுகள், செல்போன்கள், வங்கி கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் ரூ.3,25,000 ஆகியவை கைப்பற்றினர்.
தமிழ்நாடு மட்டுமின்றி மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி மாநிலங்களிலும் கைவரிசை காட்டிய இக்கும்பல் ரூ.1 கோடிக்கு மேல் ஆன்லைன் வர்த்தக மோசடி செய்திருப்பதாகவும் தனிப்படை போலீஸார் தெரிவித்தனர்.