கேளம்பாக்கம்: கேளம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் சாலையில் படுத்திருந்தவர் மீது மாநகர பேருந்து ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேளம்பாக்கம் - கோவளம் சாலையில் கேளம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து தாம்பரம் மற்றும் சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு தினமும் ஐம்பதுக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு கேளம்பாக்கத்திலிருந்து பிராட்வே மார்க்கமாக செல்லும் மாநகரப் பேருந்து தடம் எண் 102 இரவு 11:30 மணியளவில் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்துள்ளது.
பேருந்து நிலையத்தில் சுற்றித் திரியும் அடையாளம் தெரியாத சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் பேருந்து நிலைய வளாகத்தில் சாலையில் படுத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை கவனிக்காத பேருந்து ஓட்டுநர் பெரும்பாக்கத்தை சேர்ந்த வீரய்யா (47) பேருந்து நிலைய வளாகத்தில் வண்டியை திருப்பி உள்ளார். அப்போது சாலையில் படுத்திருந்த அந்த ஆண் நபர் மீது மாநகரப் பேருந்தின் டயர் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அடையாளம் தெரியாத அந்த நபர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மாநகரப் பேருந்து ஓட்டுநர் வீரய்யா (47), நடத்துநர் செய்யூரை சேர்ந்த புண்ணியகோட்டி (46) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.