சென்னை: வேளச்சேரியில் உள்ள ‘டிஎன் சிட்ஸ்’ நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.
சென்னை வேளச்சேரியில் இயங்கிய ‘டிஎன் சிட்ஸ்’ என்ற நிதி நிறுவனம் மோசடி புகாரில் சிக்கியது. முதலீடு செய்தவர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த நிதி நிறுவனத்தை நடத்தி வந்தவர்களை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். தற்போது கைதானவர்கள் ஜாமீனில் உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகம், பழைய பெருங்களத்தூர், மேற்கு தாம்பரம் ஆகிய இடங்களில் இயங்கிய கிளை அலுவலகங்களில் பணத்தை முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனுக்களை அளிக்கலாம் என்று சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், "இந்த நிதி நிறுவனத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்துக்கு நேரடியாக வந்து, இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியனிடம் தங்களது புகார் மனு மற்றும் முதலீடு செய்ததற்கான ஆவணங்களுடன் வரும் 30-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.