நெல்லை மேலப்பாளையத்தில் திரையரங்கம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது


திருநெல்வேலி: நெல்லை மேலப்பாளையத்தில் ‘அமரன்’ திரைப்படம் திரையிடப் பட்டுள்ள திரையரங்கு மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசினர்.

மேலப்பாளையம் பிரதான சாலையில் உள்ள அலங்கார் திரையரங்கில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ படம் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன் எஸ்டிபிஐ கட்சியினர் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், நேற்று அதி காலை இந்த திரையரங்கத்தின் முகப்பில் அடையாளம் தெரியாத இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அங் குள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பகுதிகளை ஆய்வு செய்து, தப்பியோடிய நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

இதற்கிடையில், திரையரங் கில் இருவர் பெட்ரோல் குண்டு களை வீசுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங் களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதல்கட்ட விசாரணையில் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது தெரிய வந்துள்ளது. நேற்று இரண்டு காட்சிகளை ரத்து செய்வதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில், திரையரங்கை பார்வையிட இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார் தலைமையில், மாநில செயலாளர் குற்றாலநாதன், பொதுச் செயலாளர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். ஆனால், திரையரங்கில் விசாரணை நடப்பதாகக் கூறி அவர்களை துணை ஆணையர் விஜயகுமார் தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதைக் கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

x