சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. அப்போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார். இதனால், வங்கி லாக்கரில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பி உள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே, வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ வங்கி உள்ளது. இந்த வங்கி கிளை எந்நேரமும் பரபரப்புடன் காணப்படும். இங்கு பணம் செலுத்தும் இயந்திரமும் (மணி டெபாசிட் மெஷின்), பணம் எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரமும் உள்ளதால், 24 மணி நேரமும் பரபரப்புடன் இயங்கி கொண்டிருக்கும்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வங்கியின் அலாரம் ஒலித்துள்ளது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளுக்கும் ‘அலர்ட்’ வந்ததால், அவர்கள் உடனடியாக வங்கிக் கிளைக்கு விரைந்துள்ளனர். அப்போது, வங்கியின் கிரில் கேட் மற்றும் வங்கியின் கதவுகளில் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
திருவல்லிக்கேணி துணை ஆணையர் செல்வ நாகரத்தினம், உதவி ஆணையர் அழகு, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் இளையராஜா உட்பட மேலும் பல போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் துறையினர் விரைந்து வந்து கைரேகைகளை சேகரித்து சென்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தரப்பில், “கொள்ளையன் அடுத்தடுத்து இரண்டு பூட்டுகளை உடைத்து உள்ளே நுழைந்துள்ளார். பணம் வைக்கப்பட்டிருக்கும் லாக்கரை உடைக்கும்போது வங்கியில் உள்ள அலாரம் ஒலித்துள்ளது. இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. அதை அடிப்படையாக வைத்து விசாரித்து வருகிறோம். தலைமறைவாக உள்ள கொள்ளையனை தனிப்படை அமைத்து தேடிவருகிறோம்” என கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கி லாக்கர் உடைக்கப்படவில்லை என்பதை வங்கி அதிகாரிகள் உறுதி செய்தனர். இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது.