சென்னை தி.நகரில் பிறந்து 45 நாள் ஆன ஆண் குழந்தை கடத்தல் - போலீஸ் விசாரணை


சென்னை: சென்னை தியாகராய நகரில் பிறந்து 45 நாள் ஆன, ஆண் குழந்தை கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக கண்ணகி நகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கண்ணகி நகரை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (36). பெயிண்டர். இவரது மனைவி நிஷாந்தி (30). இவர்களுக்கு திருமணமாகி பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லை. இந்நிலையில் 45 நாட்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இன்று நர்ஸ் என கூறி 28 வயதுள்ள ஒரு பெண் நிஷாந்தி வீட்டுக்கு சென்றார். அவர், “அரசு மகப்பேறு மருத்துவமனையில் இருந்து வருகிறேன். உங்கள் குழந்தைக்கு அரசு உதவி பணமாக வந்துள்ளது. தி.நகர் சென்று வாங்க வேண்டும்” என கூறி உள்ளார். பெண்ணின் பேச்சை நம்பிய நிஷாந்தி அவருடன் ஆட்டோவில் சென்றார். தி.நகர் பேருந்து நிலையம் சென்றதும் அந்த பெண் ரூ.100 கொடுத்து பக்கத்து தெருவை காட்டி அங்குள்ள கடையில் இருந்து பிஸ்கெட், குளிர்பானம் வாங்கி வர கூறி உள்ளார்.

நிஷாந்தி குழந்தையை ஆட்டோவில் இருந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வரும்போது குழந்தையுடன் பெண்ணை காணவில்லை. ஆட்டோவும் இல்லை. பதறிய அவர் அந்த பகுதி முழுவதும் தேடினார். கிடைக்கவில்லை. இதனையடுத்து கண்ணகிநகர் போலீசில் புகார் அளித்தார். போலீஸார் வழங்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கண்ணகி நகர் முதல் தி.நகர் மற்றும் அங்கிருந்து பல்வேறு சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர். இதில் குழந்தையை கடத்திய பெண், தனது துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சியின் அடிப்படையிலும், ஆட்டோ பதிவெண்ணை வைத்தும் குழந்தையை கடத்திய பெண்ணை போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x