கோவை: திருப்பூரை சேர்ந்த 25 வயது இளம்பெண் கோவையில் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். எம்.எஸ்சி. பட்டதாரியான அவர் திடீரென்று அந்த வேலையை விட்டுவிட்டார். வேலையில் சேரும்போது கொடுத்திருந்த கல்வி சான்றிதழை திருப்பித் தர அந்நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர்.
இதைத் தொடர்ந்து, தனக்கு தெரிந்த கல்வீரம்பாளையத்தை சேர்ந்த பேராசிரியர் சிவப்பிரகாசம்(45) என்பவரின் உதவியை இளம்பெண் நாடினார். அவர் சான்றிதழை வாங்கித் தருவதாகவும், வேறு இடத்தில் வேலை வாங்கி தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நேற்று முன்தினம் அவரது வீட்டுக்கு இளம்பெண் சென்றபோது, சிவப்பிரகாசம் தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனடியாக இளம்பெண் குளியலறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர், தனது தோழியை செல்போன் மூலம் தொடர்புகொண்டு நடந்ததை கூறியதுடன், அவர் இருக்கும் லொக்கேஷனையும் அனுப்பி வைத்தார்.
உடனே அவருடைய தோழி அதை கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைத்தார். கட்டுப்பாட்டு அறை போலீஸார், வடவள்ளி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸார் உடனடியாக சிவப்பிரகாசம் வீட்டுக்கு சென்று குளியலறையில் இருந்த இளம்பெண்ணை மீட்டனர். இளம்பெண் புகாரின்பேரில் பேராசிரியர் சிவப்பிரகாசத்தை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.