பெங்களூரு: தீபாவளி பண்டிகைக்கு பெட்ரோல் குண்டு வெடித்து கொண்டாடிய வீடியோ வைரலானதையடுத்து ஹாசனில் உள்ள ராஜீவ் ஆயுர்வேத கல்லூரி மாணவர் மீது கர்நாடக போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஹாசனில் உள்ள ராஜீவ் ஆயுர்வேத கல்லூரியில் இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைப் படிப்பை மேற்கொண்டு வரும் கிரண், கல்லூரிக்கு அருகில் உள்ள சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை உறிஞ்சி எடுத்து, பிளாஸ்டிக் பாட்டிலில் நிரப்பி வெடிவைத்து வெடித்துள்ளார். இந்த நிகழ்வை அவரது நண்பர்கள் பதிவு செய்துள்ளனர்.
அதிர்ச்சியை உருவாக்கிய இந்த வீடியோ பொதுமக்களிடம் பெரும் பரபரப்பை உருவாக்கியது. தீபாவளிக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த வீடியோ பரவத் தொடங்கியதால், சம்பவத்தில் தொடர்புடைய கிரண் மற்றும் இரண்டு இறுதி ஆண்டு மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஹாசன் போலீஸார் கூறுகையில், “மூன்று இறுதியாண்டு மாணவர்கள் தீபாவளியை பெட்ரோல் குண்டு வைத்து கொண்டாடியது பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம்” என்றார்.
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுதல் மற்றும் இறக்குவதற்கான முனையம் ராஜீவ் காந்தி ஆயுர்வேத கல்லூரி விடுதியின் அரை கிலோமீட்டருக்குள் அமைந்துள்ளது. இந்த முனையம் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட மண்டலத்திற்குள் உள்ளது.
இந்த தடைசெய்யப்பட்ட பகுதிக்கு அருகே மாணவர்கள் பெட்ரோல் குண்டை வெடிப்பதைக் காட்டும் காணொலி பரவியதைத் தொடர்ந்து, பாதுகாப்பு மற்றும் சட்ட விதிமுறைகளை மீறியது குறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.