சமூக ஊடகங்களை இறுக்கி நெருக்கும் ஆந்திர அரசு: 100 வழக்குகள் பதிவு, 39 பேர் கைது


ஹைதராபாத்: அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களை குறிவைத்து சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் பதிவுகளுக்கு எதிராக ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அரசு கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆந்திர மாநிலத்தில் சமூக ஊடக பதிவுகளுக்காக இதுவரை 100 போலீஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் மற்றும் சமூக ஊடக உள்ளடக்கத்திற்காக 67 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகள் இரு குழுக்களிடையே மோதலை ஊக்குவிக்கும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கு பதியப்பட்டுள்ள சமூக வலைதள பதிவுகளில், முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி, அவரது மகனும் அமைச்சருமான லோகேஷ் மனைவி பிராமினி, துணை முதல்வர் பவன் கல்யாணின் மகள்கள் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.சர்மிளா ஆகியோரைக் குறித்து விமர்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திரமூட்டும் பதிவுகளுக்கு பதிலளிக்கும் போது, கண்ணியமாக இருக்க வேண்டும் என்று தனது கட்சி உறுப்பினர்களிடம் முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியான ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, சமூக வலைதள பதிவுகளுக்காக தங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு 650 நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரு வாரத்தில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் கூறியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவும், ஆளும் தெலுங்கு தேசம் கட்சியும் தேர்தலுக்கு முன் அளித்த சூப்பர் சிக்ஸ் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று ஜெகன்மோகன. ரெட்டி கூறியுள்ளார். "உங்கள் மீது ஏன் 420 வழக்கு பதிவு செய்யவில்லை? கேள்வி கேட்டால் வழக்குப்பதிவு செய்து கைது செய்வோம் என்கிறீர்கள். நான் உட்பட எங்கள் கட்சி தலைவர்கள், தொண்டர்கள், சமூக வலைதள ஆர்வலர்கள் கண்டிப்பாக உங்களுக்கு எதிராக பதிவிடுவார்கள்" என்றார்.

இதற்கிடையில், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் மார்பிங் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக திரைப்பட இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஆந்திர போலீஸார் நேற்று சம்மன் அனுப்பியுள்ளனர். அடுத்த வாரம் விசாரணை அதிகாரி முன் ஆஜராகுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். விசாரணைக்கு ஆஜராவதாக போலீஸாரிடம் அவர் கூறியுள்ளார்.

x