துண்டித்த மனித தலையை சாலையில் வீசிய கொடூரம்: மதுரையில் போலீஸாருக்கே சவால் விடும் சம்பவமா?  


மதுரை: மதுரையில் துண்டிக்கப்பட்டு சாலையில் மனித தலையை வீசிய கொடூரச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்டவரின் உடல் பகுதியை போலீஸார் தேடி அலைகின்றனர்.

மதுரை திருப்பாலை பகுதியிலுள்ள வாசுநகர் எதிரே நத்தம் சாலையின் நடுவே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 7 மணிக்கு கிடந்தது. அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து திருப்பாலை, தல்லாகுளம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் துண்டித்த நிலையில் கிடந்த தலையை கைப்பற்றினர்.

தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். தலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் அந்த நபர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தண்ணீரில் மூழ்கடித்து கொன்று, தலை துண்டிக்கப்பட்டதா என்ற பல்வேறு கோணத்திலும் விசாரிக்கின்றனர். திருப்பாலை காவல் நிலையம் அருகே சாலையில் துண்டிக்கப்பட்ட ஒருவரின் தலை கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை போலீஸாருக்கு சவால் விடும் வகையில் காவல் நிலையம் அருகே துண்டித்த தலையை போட்டுவிட்டு செல்லும் அளவுக்கு கொலையாளிகளுக்கு தைரியம் வந்து விட்டதா என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. துண்டித்த தலையை போலீஸார் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ''பொதுவாக தலை, உடல் பகுதி துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்படுவோர் பற்றி அடையாளம் காண சம்பந்தப்பட்ட நபரின் உடல் பாகம் கிடைக்க வேண்டும். தலை கிடந்த பகுதியில் அருகே உடல் பகுதி கிடக்கிறதா என மோப்பநாய் உதவியுடன் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுடி வருகிறோம். மேலும், அப்பகுதியில் சமீபத்தில் மாயமானவர்கள் குறித்த புகார் விவரம் குறித்தும் காவல் நிலையங்களில் சேகரிக்கிறோம்.

தலை கிடந்த இடத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் மயானம் ஒன்று உள்ளது. யாராவது இறந்து அங்கு உடலை தகனம் செய்த போது, தலை பகுதி தீயில் எரியாமல் இருந்து அதை நாய் தூக்கிச் சென்று போட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரிக்கிறோம். குறிப்பாக துண்டித்த மனித தலை எங்கிருந்து வந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கிறோம். அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகிறது. விரைவில் கண்டறிந்து விடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது'' என்றனர்.

x