உத்தரப் பிரதேசம்: கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய சென்ற ஏழு வயது சிறுவனுக்கு, வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
மருத்துவரின் அலட்சியத்தால், கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனையில் இடது கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய சென்ற ஏழு வயது சிறுவனின் வலது கண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நவம்பர் 12 ஆம் தேதி செக்டார் காமா 1 இல் உள்ள ஆனந்த் ஸ்பெக்ட்ரம் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்தது.
இதுகுறித்து பேசிய சிறுவன் யுதிஷ்டிரரின் தந்தை நிதின் பாடி, “ எனது மகனுக்கு இடது கண்ணில் அடிக்கடி நீர் வழிந்ததால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் ஆனந்த் வர்மா, அவரது கண்ணில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியும் என்றும் கூறினார். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000 செலவானது. மருத்துவர் கடந்த செவ்வாய்க்கிழமை என் மகனுக்கு அறுவை சிகிச்சை செய்தார்” என்றார்
ஆனால், வீட்டிற்கு வந்ததும், சிறுவனின் தாய் தவறான கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைக் கவனித்தார். இதைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மருத்துவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். ஆனால் அவரும், அவரது ஊழியர்களும் அவர்களிடம் தவறாக நடந்து கொண்டு எச்சரித்தனர். இதனையடுத்து சிறுவனின் குடும்பத்தினரால் மருத்துவமனையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கௌதம் புத்த நகரின் தலைமை மருத்துவ அதிகாரியிடம் (CMO) புகார் அளித்தனர். மேலும், சிறுவனின் தந்தை அளித்த புகாரில், மருத்துவரின் உரிமத்தை ரத்து செய்யவும், மருத்துவமனைக்கு சீல் வைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது என்றும், விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.