கரூர் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 147 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது


கரூர்: கரூர் அருகே காரில் கடத்தி செல்லப்பட்ட 147 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரூர் ஈரோடு சாலையில் குட்டக்கடை அருகே நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீஸார் புதன்கிழமை (நவ. 13) வாகன சோதனை மேற்கொண்டனர். அவ்வழியே சென்ற ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் 147 கிலோவை கைப்பற்றினர்.

காரை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தைச் சேர்ந்த தேவா என்கிற தேவராஜ் (42) மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கரூர் கிளை சிறையில் அடைத்தனர். குட்காவை பறிமுதல் செய்த கரூர் நகர காவல் நிலைய நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமை காவலர் ஆண்டனி இளங்கோ, முதல்நிலை காவலர் தீனதயாளன் ஆகியோரை எஸ்.பி. கே.பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டினார்.

மேலும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை யாரேனும் விற்பனை செய்வதாக தெரியவந்தால் கரூர் காவல் கண்காணிப்பாளரின் செல்போன் எண்ணான 94421 49290ல் புகார் தெரிவிக்கலாம் என எஸ்.பி தெரிவித்துள்ளார்.

x