அவிநாசி: குன்னத்தூரில் ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதன்கிழமை (நவ.13) கைது செய்தனர்.
குன்னத்தூர் வட்டம் இடையர்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் முருகேசன். பின்னலாடை சார்பு தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவரது நிலத்தை அளவீடு செய்து தரும்படி, இடையர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்து விட்டு அதற்காக காத்திருந்தார். நிலத்தை அளந்து தர ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விரும்பாத முருகேசன், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து புதன்கிழமை மதியம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை முருகேசனிடம் இருந்து கிராம நிர்வாக அலுவலர் வின்சென்ட் தியாகராஜன் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் சசிலேகா தலைமையிலான போலீஸார், வின்சென்ட் தியாகராஜனை குன்னத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து கைது செய்தனர். தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் வின்சென்ட் தியாகராஜனை திருப்பூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.