புதுச்சேரி: ஜாமீன் கிடைக்காமல் நீதிமன்றத்திலில் இருந்து தப்பிய ரவுடி கைது


ரவுடி ராமு | கோப்புப் படம்

புதுச்சேரி: எம்.எல்.ஏ-வுக்கு கொலை மிரட்டல் வழக்கில், நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய ரவுடி ராமுவை போலீஸார் இன்று கைது செய்தனர்.

புதுச்சேரி ஜிப்மர் எதிரே உள்ள நகராட்சிக்கு சொந்தமான கடைகளை அரசியல் ஆதரவு பெற்ற ரவுடி ராமு என்பவர் ஆக்கிரமித்துள்ளார். இதை அங்கிருந்த வியாபாரிகள் பாஜக ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ சிவசங்கரனிடம் புகாராக கூறியுள்ளனர். அதன் அடிப்படையில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில், நகராட்சி ஆணையரிடம் புகார் தெரிவித்த உழவர்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கரனை ரவுடி ராமு நேரியாக எம்எல்ஏ அலுவலகத்திற்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது குறித்து எம்எல்ஏ சிவசங்கரன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இரண்டு தனிப்படை அமைத்து ரவுடி ராமுவை தீவிரமாக தேடி வந்தனர். மேலும், போலீஸார் நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் டூவீலரில் ஊர்வலமாக வந்து ஆளுநர், முதல்வரிடம் மனு தந்தனர். இதனிடையே, நேற்று புதுச்சேரி நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி ரவுடி ராமு சரணடைந்தார்.

அங்கு, எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் ராமுவுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி வழக்கை நீதிபதி முடித்த நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இருந்து ரவுடி ராமு தப்பியோடினார். இந்நிலையில், கதிர்காமம் மருத்துவமனை அருகே பதுங்கி இருந்த ராமுவை போலீஸார் இன்று கைது செய்து புதுச்சேரி நீதித்துறை 2வது நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

x