மதுரை: சர்வதேச பங்கு சந்தையில் ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி கும்பல் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் கிடப்பிலுள்ள திருட்டு, ஆன்லைன் மோசடி போன்ற குற்றச்செயல்களை கண்டுப்பிடித்து, நடவடிக்கை எடுக்க எஸ்பி அரவிந்த் உத்தரவிட்டார். இதன்படி, கடந்த ஜூன் மாதம் மதுரையைச் சேர்ந்த ஒருவரிடம் சர்வதேச பங்கு சந்தையில் ஆன்லைன் வர்த்தக முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்ற ரூ.96.57 லட்சம் மோசடி வழக்கு குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். மோசடி நபரின் வங்கிக் கணக்குகளை கண்காணித்து அவரது கணக்கில் இருந்த ரூ.38.28 லட்சம் முதல் கட்டமாக முடக்கப்பட்டது.
தொடர்ந்த நடத்திய விசாரணையில், மோசடி கும்பல் குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கை பயன்படுத்தி மோசடி தொகை ரூ.20 லட்சத்தை திருச்சி ஆழ்வார் தெருவைச் சேர்ந்த சேக் தாவூத் என்பரின் மகன் சீனி முகமதுக்கு (30) இரு வங்கி கணக்கில் அனுப்பியது தெரிந்தது. இப்பணத்தை சீனி முகமது பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளது. இதைதொடர்ந்து சீனி முகமதுவை தனிப்படையினர் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், திருச்சி உறையூர் லியாத் அலி மகன் இப்ராகிம் (30), திருச்சி ரத்தினம் நகர் அப்துல் நசீர் மகன்கள் முகமது சபீர் (26), முகமது ரியாஸ் (30), உறையூர் லியாகத் அலி மகன் முகமது அசாரூதீன் (25), தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி முகமது தாஜீதீன் மகன் முகமது மர்ஜூக் (40) ஆகியோர் சேர்ந்து இந்த ஆன்லைன் வர்த்தக மோசடி செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக அவர்களை தனிப்படையினர் கைது செய்து, அவர்களிடம் செல்போன்கள், சிம் கார்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்கள், ஏடிஎம் கார்டுகளை போலீஸார் கைப்பற்றினர். ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் ரூ.1 கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கும் இக்கும்பல், மேற்கு வங்கம், கர்நாடகா, டெல்லி மாநிலங்களிலும் கைவரிசை காட்டியதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த மோசடி கும்பலை கைது செய்த தனிப்படையினரை எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பாராட்டினர்.