கும்பகோணம்: மருமகளை கொடுமைப்படுத்திய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 4 பேர் மீது வழக்கு


கோப்புப் படம்

கும்பகோணம்: கும்பகோணத்தில், மருமகளைக் கொடுமைப்படுத்தியதாக மாமியாரான அதிமுக ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளரான கணவர் உள்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கும்பகோணம் வட்டம், கடிச்சம்பாடியைச் சேர்ந்தவரும், ஊராட்சித் தலைவருமாக இருப்பவர் மலர்கொடி. இவரது கணவர் சீனிவாசன். இவர்களுக்கு சிவா அய்யப்பன் மற்றும் அருண்குமார் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் சிவா அய்யப்பனுக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது. அம்மாசத்திரம் ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் அருண்குமாருக்கும், திருச்சி மாவட்டம், துவாக்குடியைச் சேர்ந்த ராகவன் மகள் நிவேதாவிற்கும், கடந்த 2022,மார்ச் 14-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

அருண்குமார்-நிவேதா தம்பதியினர் இருவருக்கும் அண்மைக்காலமாக பல்வேறு காரணங்களால், தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 16-ம் தேதி நிவேதாவை, அவரின் கணவரும், அம்மாசத்திரம் ஊராட்சிச் செயலாருமான அருண்குமார், மாமனார் சீனிவாசன், மாமியாரும் அதிமுக ஊராட்சி மன்றத் தலைவருமான மலர்கொடி, கணவரின் சகோதரர் சிவா அய்யப்பன் ஆகிய 4 பேர் தகாத வார்த்தைகளால் பேசி கொடுமைப்படுத்தி உள்ளனர்.

இது தொடர்பாக நிவேதா, அண்மையில், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார், பிஎன்எஸ் சட்டம் 35 மற்றும் 351(2) ஆகிய 2 பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவர்கள் தலைமறைவாக இருப்பதால், அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். அதிமுக ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சிச் செயலாளர் உள்பட 4 பேர் வழக்குப் பதிந்து செய்துள்ளதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

x