விழுப்புரம்: விழுப்புரத்திலிருந்து புதுச்சேரிக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 1கிலோ 350 கிராம் கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மேற்கு போலீஸார் இன்று பாப்பான்குளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த பைக்கை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்திய போது முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினர்.
பின்னர் அவர்களை சோதனை நடத்தியதில், அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் புதுச்சேரி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சக்திபாலா(20), புவனேஸ்வர்(20) என்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திய போது, விழுப்புரம் பாப்பான்குளம் பகுதியில் அசைன்(25) என்பவர் வீட்டிலிருந்து கஞ்சா பொட்டலங்களை வாங்கிக் கொண்டு புதுச்சேரியில் விற்பனைக்காக கொண்டு சென்றதை ஒப்புக் கொண்டுள்ளனர். இதனை தொடர்ந்து போலீஸார் அசைன் வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த அசைனை போலீஸார் கைது செய்தனர்.
மேலும் அசைன் சகோதரர் ஷாகுல்(எ)சல்மான்(20) என்பவர் கஞ்சா பொட்டலங்களை வாங்கி குவித்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் வீட்டின் பின்புறத்தில் மறைத்து வைத்திருந்த ஒரு கிலோ 350 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைக்கையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
மேலும், தப்பியோடிய சல்மானை போலீஸார் தேடி வருகின்றனர். தப்பியோடிய சல்மான் மீது புதுச்சேரி ஒதியன்சாவடி போலீஸில் பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.