மதுரை: உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தனது முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது நடிகை கஸ்தூரி காணொலி வழியாக திடீரென ஆஜரானார்.
சென்னையில் பிராமணர்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது மதுரை திருநகர், சென்னை மற்றும் திருச்சியில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் கைது செய்வதற்காக நடிகை கஸ்தூரியை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை திருநகர் வழக்கில் முன்ஜாமீன் கோரி கஸ்தூரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு காலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது காணொலியில் நடிகை கஸ்தூரி திடீரென தோன்றினார். பின்னர் மூத்த வழக்கறிஞர் ஆஜராவதற்காக விசாரணை மதியத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, “கஸ்தூரி அந்தப்புரம் குறித்து ஏன் பேசினார்? அவரது அந்தப் பேச்சு தானே சர்ச்சையாகியுள்ளது?” என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, கஸ்தூரி தரப்பில் அவரிடம் விவரம் கேட்டு தெரிவிப்பதாக வழக்கறிஞர் தெரிவித்தார். இதனால் வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மாலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
முன்னதாக, நீதிபதி மற்றொரு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது உயர் நீதிமன்ற காணொலியில் ஆஜரான நடிகை கஸ்தூரி, வீடியோவை மட்டும் ஆப் செய்துவிட்டு, மைக்கை ஆன் செய்து கொண்டு வழக்கு தொடர்பாக பேசிக் கொண்டிருந்தது காணொலி வாயிலாக உயர் நீதிமன்ற விசாரணையை கண்காணித்துக் கொண்டவர்களுக்கு தெளிவாக கேட்டது. போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வரும் நடிகை கஸ்தூரி, உயர் நீதிமன்ற விசாரணையில் காணொலி வழியாக பங்கேற்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு கடும் எதிர்ப்பு: இதனிடையே, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் பாஸ்கரன் வாதிடுகையில், “மனுதாரர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் நடத்திய கூட்டத்தில் தெலுங்கு பேசும் பெண்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார். அவரது பேச்சு சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையிலும், இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்கும் வகையிலும் உள்ளது. இந்த பேச்சு முழுக்க முழுக்க உள்நோக்கம் கொண்டது.
பொது இடத்தில் ஒரு சமூகத்தை அவதூறாகப் பேசிவிட்டு வருத்தம் தெரிவிப்பதால், அந்த சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைக்க முடியாது. மனுதாரர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 பிரிவுகள் ஜாமீனில் வெளிவர முடியாது பிரிவுகளாகும். மனுதாரர் மீது 6 வழக்குகள் பதிவாகியுள்ளது. எனவே, மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார்.
மேலும், “தமிழகத்துக்கும் கர்நாடகம், கேரளம் இடையே சில பிரச்சினைகள் உள்ளது. தமிழகத்தின் நட்பு மாநிலங்களாக இருப்பது ஆந்திரா மற்றும் தெலங்கானா. திருப்பதி செல்லும் பக்தர்கள் 40 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இவ்விரு மாநிலங்களுக்கும், தமிழகத்துக்கும் இடையே உள்ள நட்புறவை கெடுக்கும் வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு கஸ்தூரி இவ்வாறு பேசியுள்ளார்.
சென்னைக் கூட்டத்தில் ஒரே கொள்கை உடைய பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் மொழி ரீதியாக பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இதை அனுமதித்தால் சமூக நல்லிணக்கத்துக்கு கேடு ஏற்படும். மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கினால் அவரைப்போல் மற்றவர்களும் பேசத் தொடங்குவார்கள். எனவே முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என்றார். இதையடுத்து, கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை தீர்ப்புக்காக நவ.14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.