மதுரை: மதுரை அருகே தம்பதியருக்கான நிகழ்ச்சி என்ற போர்வையில் பாலியல் தொழில் புரிந்ததாக தனியார் விடுதி (ரிசார்ட்) மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். 28 பேரை போலீ ஸார் எச்சரித்து விடுவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையைச் சேர்ந்த ஒருவருக்கு, மதுரை சத்திரப்பட்டி அருகே மஞ்சம்பட்டியில் தங்கும் விடுதி உள்ளது. மஞ்சம்பட்டியைச் சேர்ந்த ராஜா என்பவர் இந்த விடுதியை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.
இங்கு ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட விடுமுறை நாட்களில் முக்கியப் பிரமுகர்கள், வசதியான இளைஞர்களை குறிவைத்து பல்வேறு தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்துள்ளன. இது குறித்த தகவல் வாரந்தோறும் வாடிக்கையாளர்களுக்கு பகிரப்பட்டது. பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற பெயரில், திரைமறைவில் பாலியல் தொழில் நடப்பதாகவும், இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெண்கள் வரவழைக்கப் படுவதாகவும் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் ஊமச்சிகுளம் காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீஸார் விடுதிக்குள் நுழைந்து ‘திடீர்’ ஆய்வு மேற்கொண்டனர். கோவை, கோவில்பட்டி, பழனி உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த 12 தம்பதிகள், 20-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது தெரியவந்தது.
என்ன நிகழ்ச்சி என போலீஸார் விசாரித்தபோது அதிர்ச்சி தகவல் கிடைத்தது. தம்பதியருக்கான நிகழ்ச்சி என்ற போர்வையில் பாலியல் தொழில் புரிந்தது தெரியவந்தது. இதையடுத்து விடுதி மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற 28 பேரை போலீஸார் கடுமையாக எச்சரித்து விடுவித்தனர்.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீஸார் கூறிய தாவது: ஆன்லைனில் வெளியிடப்படும் கவர்ச்சி விளம்பரங்கள் மூலம், பங்கேற்பாளர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தம்பதி என்ற போர்வையில் வருகின்றனர். இதற்காக குறிப்பிட்ட பணம் கட்டணமாக பெறப்பட்டு ஆண்கள், பெண்கள் தாங்கள் விரும்பிய ஆண், பெண் துணைகளை தேர்ந்தெடுத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
தம்பதிகளுக்கான நிகழ்ச்சி என்று அறிவித்துவிட்டு லாப நோக்கில் பாலியல் தொழில் புரிந்ததாக கூறி, விடுதி மேலாளரும் ஒருங்கிணைப்பாளருமான செந்தில்குமார்(40), அவரது மனைவி ஜெயலட்சுமி என்ற ஜெபிதா(35) குத்தகைதாரர் ராஜா(48) ஆகியோரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் இருந்து செல்போன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்தோம்.
நிகழ்ச்சியில் பங்கேற்று சிக்கிய 28-க்கும் மேற்பட்டோரை எச்சரித்து விடுவித்தோம். சென்னையைச் சேர்ந்த விடுதி உரிமையாளர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவரைத் தேடி வருகிறோம். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை புறநகர் பகுதியில் உள்ள விடுதிகளை கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். இதுபோல் சம்பவங்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.