உத்தரப் பிரதேசம்: 2016 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டபோது, தனது மகன் சிறார் என்று நிரூபிக்க, போலியான பள்ளி இடமாற்ற சான்றிதழை (டிசி) தயாரித்த நொய்டாவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார்.
2016 ஆம் ஆண்டில், கிரேட்டர் நொய்டாவின் ஈகோடெக்-3 காவல் நிலையப் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 17 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக மோகன்லாலின் மகன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், குற்றவாளி வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததும், அவர் கத்தியதால் துணியால் கழுத்தை நெரித்து கொன்று, உடலை அருகிலுள்ள காலி இடத்தில் வீசியதும் தெரியவந்தது.
இதனையடுத்து மோகன்லால், கான்பூரில் உள்ள ஒரு பள்ளியின் முதல்வர் நாதுராமுடன் இணைந்து தனது மகனுக்கு போலியான இடமாற்றச் சான்றிதழைத் தயாரித்து, அவன் ஒரு சிறார் என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சான்றிதழைப் பயன்படுத்தி, நீதிமன்றம் அவரது மகனை நொய்டாவின் 2 ஆம் கட்ட சீர்திருத்த இல்லத்தில் தங்க வைத்தது. வயதை நிர்ணயிக்கும் விசாரணையில், சிறார் நீதி வாரியத்திடம் தனது மகன் பிப்ரவரி 10, 2000 அன்று பிறந்ததாகவும், தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு வரை முடித்ததாகவும் மோகன்லால் தெரிவித்தார். இதை சரிபார்க்க அவரது தந்தை மதிப்பெண் பட்டியலையும் வழங்கினார். வாரியம் பின்னர் பள்ளி முதல்வருக்கு சம்மன் அனுப்பியது, அவர் பிறந்த தேதியை உறுதி செய்தார்.
ஆனால், சிறுமியின் குடும்பத்தினர் குற்றவாளியின் சரியான ஆவணங்களை சிறார் நீதி வாரியத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், தனது மகனுக்கு கடுமையான தண்டனையைத் தவிர்க்க போலியாக டிசியை உருவாக்கிய மோகன்லாலின் செயல் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனையடுத்து, மோகன்லால் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். மேலும் நாதுராமைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.