தாம்பரம் அருகே லிப்டில் சிக்கி காவலாளி உயிரிழப்பு!


தாம்பரம்: ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் லிப்டில் சிக்கி காவலாளி பலியானார். இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமா என சேலையூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். லிப்டில் காவலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் அருகே சேலையூர் ராஜாஜி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் நட்ராஜ் (56) இவர் ராஜகீழ்பாக்கம் மாடம்பாக்கம் பிரதான சாலையில் உள்ள ஜெயின் சுதர்சன் அபார்ட்மெண்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த குடியிருப்பில் 1 முதல் 14 பிளாக்குகள், 4 அடுக்குமாடி குடியிருப்புகளாக மொத்தம் 420 வீடுகள் உள்ளன. இந்நிலையில் நான்காவது மாடியில் உள்ள மொட்டை மாடியில் கதவை மூடிவிட்டு, லிப்டில் இறங்க முயன்ற காவலாளி, லிப்ட் மேலே வராததை கவனிக்காமல், கால் தவறி, 2வது மாடியில் இருந்த லிஃப்ட் மேல் பகுதியில் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்த சேலையூர் போலீஸார் மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் லிப்டில் சிக்கியிருந்த உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். லிப்டில் காவலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக லிப்டின் சென்சார் பழுது அடைந்துள்ளதாகவும், இதனால் கதவு திறந்ததால், தவறி விழுந்து லிப்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

லிப்டை சரி வர பராமரிக்காததால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், இது சம்பந்தமாக போலீஸார், வருவாய்துறை, தீயணைப்புத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிங்களையும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

x