கோவை: கோவை ஈஷா யோகா மையம் குறித்து செய்திகளை வெளியிட்டுவரும் வார இதழை கண்டித்து கடந்த 27-ம் தேதி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன்சம்பத்தின் மகனும், இளைஞர் அணி தலைவருமான ஓம்கார் பாலாஜி வார இதழின் ஆசிரியர் குறித்து அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், கோவை கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள வீட்டில் இருந்த ஓம்கார் பாலாஜியிடம், போலீஸார் நேற்று விசாரணை மேற்கொண்டனர். அவர் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு இந்து மக்கள் கட்சியினர் நேற்று மாலை திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அர்ஜுன் சம்பத் உள்ளிட்டோர் பூ மார்க்கெட் பகுதியில் ‘அமரன்’ திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்கிற்கு நேற்று காலை சென்று, பொதுமக்களுக்கு இலவசமாக டிக்கெட் வாங்கி கொடுத்தனர்.
இதுகுறித்து, அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மக்கள் மத்தியில் மத ரீதியான பதற்றத்தை உருவாக்கி அமரன் திரைப்படத்தை தடை செய்யும் சூழ்நிலையை சிலர் ஏற்படுத்துகின்றனர். இப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் வரிவிலக்கு அளிக்க வேண்டும். கல்வி நிலையங்களில் ‘அமரன்’ படத்தை இலவசமாக திரையிட வேண்டும்” என்றார்.