சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரியை போலீஸார் தேடி வருகின்றனர். இந்நிலையில், அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் போல் பிராமணர்களைப் பாதுகாக்க ஒரு புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் கடந்த 3-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார்.
அப்போது அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தெலுங்கு மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியதோடு, நடிகை கஸ்தூரிக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, அவர் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பேட்டி அளித்தார். அதேவேளையில் நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன.
அந்தவகையில், அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் சார்பில் சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், நடிகை கஸ்தூரி 4 சட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்பேரில் கஸ்தூரியிடம் விசாரணை நடத்துவதற்கு எழும்பூர் போலீஸார் முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற சம்மனை வழங்க சென்னை போயஸ் கார்டனில் உள்ள கஸ்தூரி வீட்டுக்கு போலீஸார் இன்று சென்றனர். அப்போது அவரது வீடு பூட்டப்பட்டிருந்தது.
இதனால் அவரது செல்போன் எண்ணை போலீஸார் தொடர்பு கொண்டனர். அப்போது செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் போலீஸார் சம்மனை அவரது வீட்டு சுவற்றில் ஒட்டிவிட்டுச் சென்றனர். கைது நடவடிக்கையை தவிர்க்க நடிகை கஸ்தூரி தலைமறைவாகி விட்டார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் முன்ஜாமீனுக்கு முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஒருபுறம் இருக்க தலைமறைவான நடிகை கஸ்தூரியை போலீஸார் தேடி வருகின்றனர்.