உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு 


உடுமலை: உடுமலை அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே 98/300-400 வது கி.மீ., சம்பவ இடத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ரத்த காயங்களுடன் கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் மாவட்டம், பழநி ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், இறந்தவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த கிரிபிரசாத்(23). பி.ஏ வரலாறு பயின்ற இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் பணியாற்றி வந்துள்ளார். அரசு வேலைக்காக முயற்சி செய்தும் வேலை கிடைக்கவில்லை என்ற மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இன்று அவர், அதிகாலை 4 மணியளவில் உடுமலை- கோமங்கலம் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரயில் பாதையை கடக்க முற்பட்டார். அப்போது அவ்வழியாக தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையம் வரை செல்லும் வண்டி எண் 16766 எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உடுமலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்பு நேற்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து பழநி ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

x