சென்னையில் போதை பொருட்கள் விற்பனை - துணை நடிகை உள்பட 7 பேர் கைது


போதை பொருள் விற்பனை செய்த துணை நடிகை மீனாவை அண்ணாசாலை காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார். (உள்படம்) மீனா.

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட துணை நடிகை உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, சாதாரண உடையில் போலீஸார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்தனர்.

சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிடம் இருந்து பார்சல் ஒன்றை வாங்குவதைப் பார்த்து போலீஸார் விரைந்து சென்று அந்த இளம் பெண்ணை சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை சோதனை செய்தபோது, அவரிடம் 5 கிராம் மெத்த பெட்டமைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணை அண்ணாசாலை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

இலங்கை தமிழர் முகாம்...: விசாரணையில், அவர் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த மீனா (27) என்பதும், நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ‘டெடி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் துணை நடிகையாக நடித்திருப்பதும் தெரியவந்தது.

கோவிலம்பாக்கம் கண்ணதாசன் தெருவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும்அவர், எஸ்தர் என்ற தனது இயற்பெயரை மீனா என மாற்றி யிருப்பதும், சினிமா மற்றும் சீரியலில் போதிய வாய்ப்பு வராததால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தரப் பில் கூறப்படுகிறது.

மேலும், அவர், வாட்ஸ்-அப் குழு மூலம், சின்னத்திரை நடிகர்கள்மற்றும் இளைஞர்கள் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர் யாரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கினார், அவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறையில் அடைப்பு: மீனாவிடம் இருந்து 5 கிராம்மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீ ஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கஞ்சா பறிமுதல்: இதற்கிடையே, நெசப்பாக்கம் ராஜீவ்காந்தி நகரில் வீட்டில் பதுக்கிவைத்து கஞ்சா விற்பனை செய்த சிவக்குமார் (24) மற்றும் அவரிடம்கஞ்சா வாங்கிச் சென்ற கோயம்பேடு சின்மையா நகர், அவ்வை திருநகர் 4-வது தெருவைச் சேர்ந்த டன்ஸ் மித் (27) என்ற இளைஞரை கோயம்பேடு போலீஸார் நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல், செம்மஞ்சேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பொறியாளர்களாக வேலை பார்த்து வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (25), மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (24), அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு ஜெரோம் (25), மற்றும் திருவான்மியூரில் தனியார் நிறுவனத் தில் பணிபுரிந்து வரும் கன்னியா குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணி ஜோஜி (27) ஆகிய 4 பேரும், ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதாக தேனாம்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

x