உதகை நகராட்சி ஆணையரிடம் கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை


உதகை: உதகை நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவிடம் கணக்கில் வராத ரூ.11.7 லட்சம் பணத்தை பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நகராட்சி ஆணையர்கள் பலரை இடமாற்றம் செய்து நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டிருந்தது. இதன்படி உதகை நகராட்சி ஆணையராக இருந்த ஏகராஜ் தேனிக்கும், தேனியில் நகராட்சி ஆணையராக ஜஹாங்கீர் பாஷா உதகைக்கும் மாற்றப்பட்டனர். மாஸ்டர் பிளான் விதி அமலில் உள்ளதால் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடம் கட்டுதல் உட்பட பல்வேறு விஷயங்களுக்கும் விதிமுறைகள் அதிக அளவில் உள்ளது.

இதற்கிடையே, உதகை நகராட்சியில் விதிமுறைகளை மீறி லஞ்சமாக பணம் பெற்றுக் கொண்டு பல்வேறு செயல்பாடுகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா நேற்று பணியை முடித்துக்கொண்டு சொந்த ஊரான சென்னைக்கு கோத்தகிரி சாலை வழியாக வாடகை காரில் சென்று கொண்டிருந்தார். லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஆய்வாளர் பரிமளாதேவி தலைமையிலான போலீஸார், தொட்டபெட்டா சந்திப்பு பகுதியில் நகராட்சி ஆணையரின் காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது காரில் கணக்கில் வராத ரூ. 11 லட்சத்து 70 ஆயிரம் பணம் இருந்தது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் நகராட்சி ஆணையர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் அவரிடம் இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து நகராட்சி அலுவலகத்துக்கு அவரை அழைத்து வந்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நள்ளிரவில் விசாரணை நடத்தினர். தற்போது ஆணையர் ஜஹாங்கிர் பாஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x