சென்னை: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் அன்பு (20). இவர் கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் அருகில் உள்ள தங்கும் விடுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு பிப்.18ம் தேதி, விடுதியில் தங்கியிருந்த ஜீவா என்பவர், தனது சட்டையில் இருந்த ரூ.4 ஆயிரம் பணத்தை காணவில்லை என அன்புவிடம் கூறியுள்ளார். உடனே, அன்பு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது, அதே விடுதியில் தங்கியிருந்த காரைக்குடியை சேர்ந்த அழகு ராஜா (34) என்பவர், ஜீவா சட்டைப்பையில் இருந்த பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து, அவர் ஜீவாவிடம் கேட்டிருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அழகு ராஜா, அன்புவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அழகு ராஜா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அன்புவை குத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். காயம் அடைந்த அன்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொலை முயற்சியாக வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீஸார், விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து அழகு ராஜாவை தேடி வந்தனர். இந்நிலையில், 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அழகு ராஜாவை, காரைக்குடியில் போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.