மதுரை: மதுரையில் ரூ.60 வழிப்பறி செய்த வழக்கில் 27 ஆண்டாக தலைமறைவாக இருந்தவரை தனிப்படையினர் சிவகாசியில் நேற்று இரவு கைது செய்தனர். 27 ஆண்டுக்குப்பின் கைது செய்த தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வெகுவாக பாராட்டினார்.
மதுரை அண்ணாநகர் ஜக்காதோப்பைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997-ல் ரூ.60 வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் போலீஸார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்போது பன்னீர்செல்வம் தலைமறைவானார். எங்கு தேடியும் பிடிக்க முடியாததால், அவரை பிடிக்க பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையில், மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், நிலுவை வழக்குகளில் தலைமறைவானவர்களை பிடித்து வழக்கை முடிக்க தனிப்படை போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி, தனிப்படையினர் நிலுவையில் வழக்குகள் குறித்து ஆய்வு செய்தனர்.
ரூ.60 வழிப்பறி வழக்கில் தலைமறைவான பன்னீர்செல்வம் குறித்து ஜக்காதோப்புக்கு சென்று விசாரித்தனர். அப்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் வசிப்பதாக தெரிந்தது. சிவகாசிக்கு சென்ற தனிப்படையினர் விசாரித்ததில், பன்னீர்செல்வம் டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து தெரிந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீஸார் அவரை நேற்றிரவு கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழிப்பறி வழக்கில் 27 ஆண்டாக தலைமறைவாக இருந்தவரை கைது செய்த தனிப்படை போலீஸாரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் வெகுவாக பாராட்டினார்.