கோவை: மருத்துவமனையை விரிவுபடுத்த கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.69.75 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததை அடுத்து குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர் திருவிக நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார்(45). இவர், திருப்பூரில் அவிநாசி சாலையில் தனியார் பல் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இதன் கிளைகள் சென்னை மற்றும் கோவையில் உள்ளன. இந்நிலையில், கிஷோர்குமார் தனது பல் மருத்துவமனை கிளையை மேலும் சில இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டார். இதற்காக அவருக்கு ரூ.15 கோடி வரை பணம் தேவைப்பட்டது. இதற்காக பல்வேறு இடங்களில் கடன்பெற முயற்சித்து வந்துள்ளார்.
அச்சமயத்தில், சக்திவேல் என்பவர் கிஷோர்குமாருக்கு அறிமுகமானர். அவர், தனக்கு தெரிந்த பிரமுகர்களிடம் இருந்து ரூ.15 கோடியை குறைந்த வட்டிக்கு வாங்கித் தர முடியும் எனக்கூறியுள்ளார். மேலும், இதற்கு தனக்கு கமிஷன் தொகையாக ரூ.69.75 லட்சம் தர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இதை நம்பிய கிஷோர்குமார் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.69 லட்சத்து 75 ஆயிரத்தை சக்திவேலிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதன் பின்னர் அவர் கடன் பெற்றுத் தர முயற்சிக்கவில்லை எனத் தெரிகிறது.
இதுகுறித்து கிஷோர்குமார் கேட்டபோது சரிவர பதில் இல்லை. எனவே, கொடுத்த கமிஷன் தொகையை திரும்பத் தருமாறு கிஷோர்குமார் கேட்டதற்கு சக்திவேல் பணம் தர மறுத்து மிரட்டியுள்ளார். இதுதொடர்பாக கிஷோர்குமார் கோவை ராமநாதபுரம் போலீஸில் நேற்று (நவ.7) புகார் அளித்தார். அதன் பேரில், போலீஸார் மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் சக்திவேல் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.