கோவை: வாடகைக் காரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி சென்ற ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் போலீஸார், முத்துக்கவுண்டன் புதூர் அருகேயுள்ள, முதலிபாளையம் பிரிவு பகுதியில் நேற்று (நவ.7) வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாடகைக் காரை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்தக் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தன. மொத்தம் 360 கிலோ அளவுக்கு இருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் மதிப்பு ரூ.3.13 லட்சம் என தெரியவந்தது.
தொடர்ந்து, காரை ஓட்டி வந்த நபரை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர் திருப்பூரைச் சேர்ந்த ரமேஷ் பாண்டி(39) என்பதும், பகல் நேரங்களில் வாடகைக் கார் ஓட்டுநராகவும், இரவு நேரங்களில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை காரில் கடத்தி வந்து கோவையில் உள்ள விற்பனைக் கடைகளில் கொடுத்து வந்ததும் தெரியவந்தது. போலீஸ் சோதனையில் பிடிபட்ட புகையிலைப் பொருட்களை கா்நாடகாவில் இருந்து வாங்கி வந்து, கோவையில் உள்ள விற்பனையாளர்களுக்கு கொடுக்க கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் ரமேஷ் பாண்டியை கைது செய்து கார் மற்றும் 360 கிலோ புகையிலைப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.