மாணவர்களுக்கு பாலியல் தொல்லை: நவல்பட்டு பள்ளி வேன் ஓட்டுநர் கைது


திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே நவல்பட்டு, அண்ணாநகரைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (53). இவர் ஆம்னி வேன் மூலம் மாணவ, மாணவிகளை பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று விட்டு வருகிறார்.

இவரது வேனில், அப்பகுதியில் உள்ள மத்திய அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவரும், தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவரும் சென்று வந்தனர். இந்நிலையில், மாலை பள்ளியில் இருந்து ஏழாம் வகுப்பு படித்து வரும் மாணவரை அழைத்துச் கொண்டு வீட்டில் விட்டுவிட்டு, திரும்ப மாத்தூரில் உள்ள டியூஷனுக்கு அழைத்துச் செல்ல வண்டியில் ஏற்றிக்கொண்டு வந்தார். வழக்கத்திற்கு மாறாக குண்டூர் நூறு அடி சாலை ஐயன்புத்தூர் கிராமம் அருகில் உள்ள ஒரு இடத்தில் வேனிலேயே அந்த மாணவனுக்கு பாலியல் தொல்லை தந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் அவரது பெற்றோரிடம் கூறினார். அவரது தம்பியையும் விசாரித்தபோது, ராஜேஷ் கண்ணா நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கும் பாலியல் தொல்லை தந்தது தெரியவந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, வேன் ஓட்டுநர் ராஜேஸ்கண்ணாவை இன்று கைது செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

x