வேலூரில் 7 ஏக்கர் நிலம் பிரச்சினையில் அதிமுக பிரமுகரை மிரட்டினாரா முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி?


வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது புகார் அளித்த அதிமுக பிரமுகர் ரிஷிகுமார்.

வேலூர்: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள 7 ஏக்கர் நிலம் தொடர்பான பிரச்சினையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டுவதாக அதிமுக பிரமுகர் ரிஷிகுமார் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்துள்ளார்.

வேலூர் விஜி.ராவ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரிஷிகுமார். அதிமுக பிரமுகரான இவர் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (நவ.7) அளித்த புகார் மனுவில், “வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் ஜோதிர்மயி என்ற பெயரில் பார்க்கிங் பாயின்ட் நடத்தி வருகிறேன். இந்த இடத்துக்கு ஜோதிர்மயி நிறுவன உரிமையாளர் பிரம்மானந்தா மற்றும் ஜெ.சேகர் ரெட்டி ஆகிய இருவரும் உரிமையாளர்கள். இவர்கள் இருவரும் அறிவுறுத்தியதன் அடிப்படையில் நான் அரங்கு பார்க்கிங் பாயின்ட் நடத்தி வருகிறேன். தற்போது, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, என்னை தொடர்புகொண்டு பார்க்கிங் இடத்தை காலி செய்யும்படி மிரட்டினார். இதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், ரிஷிகுமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சுமார் 7 ஏக்கர் அளவுள்ள நிலத்தை பிரம்மானந்தாவும், சேகர் ரெட்டிக்கு சேர்ந்து வாங்கினர். அவர்கள் கூறியதன் பேரில் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு பார்க்கிங் பாயின்ட் நடத்தி வருகிறேன். அந்த இடத்தில் இருந்து என்னை காலி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மிரட்டினார். இதுகுறித்து, அண்ணனிடம் (சேகர் ரெட்டி) பேசியபிறகு இந்த புகார் கொடுக்கிறேன். இந்த இடத்துக்கும் கே.சி.வீரமணிக்கு எந்த தொடர்பும் இல்லை. கடந்த 5 ஆண்டுகளாக அந்த இடத்தை நான்தான் பராமரித்து வருகிறேன்’’ என்றார்.

இதுதொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கு, “எனது நண்பர் பிரம்மனந்தாவும், சேகர் ரெட்டியும் சேர்ந்து 7 ஏக்கருக்கு அளவுள்ள அந்த நிலத்தை வாங்கினர். இதில், 70% பிரம்மானந்தாவுக்கும், 30% சேகர் ரெட்டிக்கும் சொந்தமானது. அந்த இடத்தில் சேகர் ரெட்டியின் உறவினர் ரிஷிகுமார் கடந்த 5 ஆண்டுகளாக பார்க்கில் பாயின்ட் நடத்தி வருகிறார். ரிஷிகுமார் என்னுடைய கட்சிக்காரர்தான். அவர் கட்சி விஷயமாகவும் தொழில் விஷயமாகவும் என்னுடன் அடிக்கடி பேசுவார்.

அதற்கெல்லாம் எல்லா ரெக்கார்டும் என்னிடம் இருக்கிறது. தற்போது, அந்த இடத்தை மொத்தமாக அபகரிக்க சேகர் ரெட்டி நினைக்கிறார். பிரம்மானந்தாவிடம் இருந்து அந்த இடத்தை குறைந்த விலைக்கு வாங்க சேகர் ரெட்டி முயற்சிக்கிறார். அந்த இடம் தொடர்பாக எனது வீட்டில் பிரம்மானந்தா இன்று (வியாழக்கிழமை) காலை பேசிக் கொண்டிருந்தார். அப்போது, என்னுடைய செல்போனில் இருந்து ரிஷிகுமாருக்கு தொடர்புகொண்டு பிரம்மானந்தாவுடன் பேசும்படி கூறினேன். அந்த இடத்தை காலி செய்து கொடுக்கும்படி அவர்தான் ரிஷிகுமாரிடம் பேசினார்.

இந்த விஷயத்தை சேகர் ரெட்டியிடம் ரிஷிகுமார் எப்படி கூறினார் என்று தெரியாது. அவர் கூறியதாகக்கூறி என்மீது புகார் கொடுத்துள்ளார். எனது செல்போனில் இருந்து அவரை தொடர்புகொண்டது உண்மை. ஆனால், நான் மிரட்டவில்லை, மிரட்டும் ஆளும் இல்லை. நான் மிரட்டியதாக ரெக்கார்டு இருந்தால் கொடுக்கட்டும். அந்த இடம் தங்கள் கைவிட்டு போய்விடுமோ என்று அவர்கள் பயப்படுகிறார்கள். அந்த இடம் தொடர்பாக பழைய பிரச்சினை எதுவும் இப்போது இல்லை. நண்பர் என்ற அடிப்படையில் அந்த இடத்தை வாங்கி வைத்தால் பிற்காலத்தில் உதவும் என்று பிரம்மானந்தாவிடம் நான்தான் கூறி அந்த இடத்தை வாங்க வைத்தேன். அவருக்கு பின்னால் நான் இருப்பதால் என் மீது புகார் கொடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்தார்.

சர்ச்சை நிலம்: வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் சுமார் 7 ஏக்கர் அளவுள்ள நிலத்தை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர மாநில தொழிலதிபர் பிரம்மானந்தாவும், சேகர் ரெட்டியும் சேர்ந்து வாங்கினர். இந்த இடம் வாங்கியதிலே பிரச்சினை ஏற்பட்ட நிலையில் கடந்த 5 ஆண்டுளுக்கு முன்பு அந்த இடத்தை கையகப்படுத்திய விதமும் சர்ச்சை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

x