திண்டிவனம் அருகே திருமணம் நடக்காததால் விரக்தி: பொறியியல் பட்டதாரி தற்கொலை


தற்கொலை செய்து கொண்ட ராஜசேகர்

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மேல் மாவிளங்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (28). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு வரை சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தனக்கு திருமணம் செய்து வைக்க சொல்லி தொடர்ந்து பெற்றோரை அவர் வலியுறுத்தி வந்ததாகவும் தெரிகிறது. ஆனால், மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாரும் பெண் தர மாட்டார்கள் என பெற்றோர் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ராஜசேகர், இன்று தனது வீட்டிற்கு பின்னால் உள்ள வாழை தோப்பில் கத்தியால் தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இத்தகவல் அறிந்த வெள்ளிமேடு பேட்டை போலீஸார் ராஜசேகர் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை தீர்வல்ல: தற்கொலை எந்தப் பிரச்சினையையும் தீர்க்காது. தற்கொலை எண்ணம் வந்தால் தற்கொலைத் தடுப்பு மையங்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.

x