நாகர்கோவில்: ஆரல்வாய்மொழி அருகே வழக்கறிஞரை கொலை செய்து அவரது உடலை எரித்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே பீமநகரியில் வேளாண் விதை ஆராய்ச்சி மையம் அருகே உள்ள குளக்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் உடல் எரிக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. இது குறித்து அவ்வழியாக சென்ற மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் தலைமையில் போலீஸார் அங்கு வந்து எரிந்த உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவ்வழியே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது திருப்பதிசாரம் கீழூரை சேர்ந்த இசக்கிமுத்து (21) என்பவர், ஒருவரை பிடித்து இழுத்து செல்வது போன்ற காட்சிகள் இருந்தது. இதைத்தொடர்ந்து இசக்கிமுத்துவை போலீஸார் பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தான் கொலையாளி என்பதை உறுதி செய்தனர். உடல் எரிக்கப்பட்ட சடலமாக கிடந்தவர் தக்கலை குமாரபுரம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி (50) என்பது தெரியந்தது.
இவர், இசக்கிமுத்துவின் சொத்து தொடர்பான வழக்கை நடத்தி வந்துள்ளார். அந்த வழக்கு வெகு நாட்களாக நடந்து வந்த நிலையில், விரைந்து வழக்கை முடிக்குமாறும், வழக்கிற்காக கொடுத்த தனது சொத்து பத்திரங்களை தன்னிடம் வழங்குமாறும் கிறிஸ்டோபர் சோபியிடம், இசக்கிமுத்து கேட்டுள்ளார். ஆனால் பலமுறை கேட்டும் அவர், வழக்கு முடிந்த பின்னர் தருவதாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இசக்கிமுத்து, கிறிஸ்டோபர் சோபியை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில் கிறிஸ்டோபர் சோபி தனது தோட்டத்தில் நடுவதற்கு வாழை கன்றுகள் வேண்டுமென இசக்கிமுத்துவிடம் கேட்டுள்ளார். அப்போது வாழை கன்று தனது தோட்டத்தில் இருப்பதாக கூறிய இசக்கிமுத்து, அவரை நேற்று இரவு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற அவரை தனது வாழை தோட்டத்திற்கு செல்வதாக கூறி மோட்டார் சைக்கிளில் கிறிஸ்டோபர் சோபியை பீமநகரியில் உள்ள சந்தியான் குளக்கரைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு வைத்து அவரை இசக்கிமுத்து அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் கிறிஸ்டோபர் சோபி சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் அவரின் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை எடுத்து கிறிஸ்டோபர் சோபியின் உடலில் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். பின்னர் அங்கிருந்து இசக்கிமுத்து தப்பி சென்றுள்ளார். வழக்கறிஞர் கிறிஸ்டோபர் சோபி கொலை செய்யப்பட்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக இசக்கிமுத்திடம் ஆரல்வாய்மொழி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.