கோவை விமான நிலையத்துக்கு 6 நாட்களில் 10 வெடிகுண்டு மிரட்டல்கள்!


கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 10வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் மூலம் பெறப்பட்டுள்ளன. கோவை விமான நிலையத்தில் தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

10 ஆயிரம் பேர் வரை பயணிக்கின்றனர். சமீப காலமாக கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு விமான நிலையங்களுக்கு நூற்றுக்கணக்கான வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு முறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் கடும் மன உளைச்சல் ஏற்படுவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை விமான நிறுவன ஊழியர்கள் கூறும்போது, “விமான நிலையத்தில் பெறப்படும் வெடிகுண்டு மிரட்டல்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. ஒவ்வொரு முறையும் கமிட்டி அமைத்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்துவது, பாதுகாப்பு வீரர்கள் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால் பணி முடிந்து செல்பவர்கள் உடனடியாக பணிக்கு திரும்பவேண்டியுள்ளது.

கடந்த சில நாட்களாக மிரட்டல்கள் தொடர்ந்து பெறப்படுவதால் அதிகாரிகள்,ஊழியர்கள் என அனைத்து பிரிவினரும் கடும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றனர்.

கோவை விமான நிலைய பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “விமான நிலையத்தில் கடந்த 6 நாட்களில் 10-க்கும் மேற்பட்ட மிரட்டல்கள் இ-மெயில் மூலம் பெறப்பட்டுள்ளன.

பயணிகள் பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் சிறப்பான முறையில் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் பயணிகள் எவ்விதஅச்சமுமின்றி வழக்கம்போல வந்துசெல்கின்றனர். மிரட்டல் விடுக்கப்படும் சம்பவங்கள் குறித்து தேசிய அளவில் விசாரணை நடக்கிறது. விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்” என்றனர்.

நடவடிக்கைகள் என்ன? - விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் பெறப்பட்டால் உடனடியாக வல்லுநர்கள் குழு மிரட்டலின் தன்மை குறித்து ஆராயும். புரளி என்பது தெரியவந்தால் கண்காணிப்பு மட்டும் தீவிரப்படுத்தப்பட்டு மற்ற பணிகள் வழக்கம் போல செயல்படும்.

மாறாக, மிரட்டல் உண்மையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதினால் விமான சேவைகள் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு விமான நிலைய வளாகம் மூடப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்படும்.

விமானத்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டால் உடனடியாக, விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தை விமானி தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இதனால் விமான புறப்பாடு நிறுத்தப்பட்டு சோதனை மேற்கொள்ளப்படும். வானில் பறக்கும்போது வெடிகுண்டு மிரட்டல் பெறப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயற்சிக்க வேண்டும். பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விமானத்தில் சோதனை மேற்கொள்வார்கள்.

x