சமூக ஊடக பிரபலத்துக்கு பாலியல் தொல்லை கொடுத்த 10 வயது சிறுவன்: பெங்களூருவில் அதிர்ச்சி


பெங்களூரு: வேலை முடிந்து இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ​​தன்னை 10 வயது சிறுவன் ஒருவன் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெங்களூரைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலம் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக பிரபலமான நேஹா பிஸ்வால் வெளியிட்டுள்ள வீடியோவில், “பி.டி.எம் லேஅவுட்டில் உள்ள தெருவில் தான் நடந்து சென்றபடி வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த போது, ​​எதிரே சைக்கிளில் வந்த ஒரு சிறுவன் என்னை தகாத முறையில் தொட்டான்.

நான் நடந்து செல்லும் போது வீடியோ எடுத்துக்கொண்டிருந்தேன், இந்த பையன் ஆரம்பத்தில் அதே திசையில் சென்று கொண்டிருந்தான். பின்னர் அவன் என்னைப் பார்த்து திரும்பி, என்னை நோக்கி வரத் தொடங்கினான். அவன் முதலில் என்னை கிண்டல் செய்தான். நான் கேமராவில் எப்படி பேசுகிறேன் என்று மிமிக்ரி செய்தான். பின்னர் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினான்.

இதன் பின்னர் அச்சிறுவன் அங்கிருந்து தப்பிக்க முயன்றான். ஆனால் நான் எச்சரிக்கை எழுப்பியதால் உள்ளூர் மக்கள் அவனை பிடித்தனர். இருப்பினும், பலரும் சிறுவன் மீது பச்சாதாபம் கொண்டு, “அவன் ஒரு குழந்தை, வேண்டுமென்றே செய்திருக்க மாட்டான்" என்று கூறினர்.

ஆனால், அந்த சிறுவன் என்ன செய்தான் என்ற வீடியோவை நான் தெளிவாக காட்டிய பிறகுதான் மக்கள் என்னை நம்பினர். அவன் சின்ன வயதில் இருப்பதால் போக விடுங்க என்று நிறைய பேர் கேட்டும், நான் நிறுத்தவில்லை, அவனை அடித்தேன், என்னை ஆதரித்து சிலர் அடித்தனர். உண்மையைச் சொல்வதென்றால், இங்கே பாதுகாப்பாக இருப்பதாக எனக்கு தோணவில்லை. இச்சம்பவத்தால் நான் இன்னும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்" என்று கூறினார்.

ஆனால், இதுகுறித்து பிஸ்வால் முறையான புகாரை பதிவு செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார். அவர், "இச்சம்பவத்தில் ஒரு சிறுவன் சம்பந்தப்பட்டிருப்பதால் நான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. அவனது எதிர்காலத்தை நான் அழிக்க விரும்பவில்லை. ஆனால் அவனைப் பிடித்து ஏதாவது ஒரு எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே இந்த வீடியோவை வைத்து பெங்களூரு போலீஸார் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவரை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து பேசிய தென்கிழக்கு பெங்களூரு டிசிபி சாரா பாத்திமா, சிறுவனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.

x