மணிமங்கலத்தில் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்: கத்தியைக் காட்டி 8 சவரன் நகை பறிப்பு 


படப்பை: மணிமங்கலம் அருகே புஷ்பகிரியில் அக்கம் பக்கத்து வீடுகளின் கதவுகளை பூட்டிவிட்டு மூதாட்டியின் வீட்டின் கதவை உடைத்து சென்று மூதாட்டியிடமிருந்த 8 சவரன் செயின், கம்மலை முகமூடிக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

மணிமங்கலம் புஷ்பகிரி 5வது தெருவில் வசிப்பவர் ராமசாமி (87). இவரது மனைவி குழந்தையம்மாள் (80). இருவரும் நேற்று இரவு உணவு முடித்துவிட்டு உறங்கச் சென்றனர். இந்நிலையில் நள்ளிரவு 2:30 மணிக்கு அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் முகத்தை துணியால் மூடிக்கொண்டு அக்கம் பக்கத்து வீட்டின் கதவுகளை வெளிப்பக்கம் தாள் போட்டுவிட்டு ராமசாமியின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

அவர்கள் மூதாட்டி குழந்தையம்மாளை கத்தியைக் காட்டி மிரட்டி கழுத்தில் இருந்த ஐந்து சவரன் செயினை பறித்தனர். தொடர்ந்து காதில் கிடந்த கம்மலையும் கழட்டிக் கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர். பயந்து போன மூதாட்டி கம்மலை கழட்டிக் கொடுத்துள்ளார். பின்னர் வேறு ஏதேனும் பொருட்கள் உள்ளதா என வீடு முழுவதும் கொள்ளையர்கள் தேடியுள்ளனர். ஆனால், அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, ''வெளியே சொன்னால் கொலை செய்து விடுவோம்'' என்று மூதாட்டியை மிரட்டிவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பினர். பின்னர் மூதாட்டி பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆசீர் சுந்தர் என்பவர் உதவியுடன் போலீஸாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர். யாரோ தெரிந்த நபர்கள் தான் நோட்டமிட்டு இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டுமென போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

புஷ்பகிரி பகுதியில் குடியிருப்புகள் குறைவாக உள்ளன. அதனால் மர்ம நபர்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஆட்கள் எப்போது வருகிறார்கள், எப்போது வெளியே செல்கிறார்கள், எந்த வீட்டில் முதியவர்கள் மட்டும் இருக்கின்றனர், எந்த வீட்டில் பெண்கள் தனியாக இருக்கின்றனர் என நோட்டமிட்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு முன்பு, அமேசிங் லவ் ஹோம் முதியோர் இல்லத்திற்குச் செல்லும் சாலையில் இரண்டு வீடுகளில் இதேபோல் புகுந்து நகை, குத்துவிளக்கு, மொபைல் போன் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீஸார் தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை.

முதியோர் இல்லத்திற்கு செல்லும் சாலையில் வசிக்கும் சிலரே இதுபோல் தொடர் திருட்டில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இனியாவது இவ்விஷயத்தில் போலீஸார் தீவிரம் காட்டி சம்பந்தப்பட்ட கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

x