மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் இருந்து, மும்பை பாந்த்ராவில் உள்ள காவல் நிலையத்திற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
ராய்பூரில் இருந்து பைசான் என்ற இளைஞன், தொலைபேசி மூலம் மும்பை பாந்த்ராவில் உள்ள காவல் நிலையத்திற்கு ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து, ரூ 50 லட்சம் மீட்பு தொகை கேட்டுள்ளார். இது தொடர்பாக மும்பை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணையை தொடங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு போலீஸ் குழு சத்தீஸ்கர் தலைநகரில் தேடுதல் பணியில் இறங்கியுள்ளது. செயலில் உள்ள தொலைபேசி எண் மூலம் பைசானின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களால் 'கிங் கான்' என்று அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கானுக்கு கடந்த அக்டோபரில் கொலை மிரட்டல் வந்தது. இதனையடுத்து மும்பை காவல்துறை அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பினை வழங்கியது. இதன் மூலம் அவரைச் சுற்றி ஆறு ஆயுதம் தாங்கிய போலீஸார் எப்போதும் காவலுக்கு இருப்பார்கள். முன்னதாக அவருக்கு ஆயுதம் ஏந்திய இரண்டு போலீஸார் மட்டுமே பாதுகாப்புக்கு இருந்தனர்.
லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மற்றும் பிற நபர்களால் நடிகர் சல்மான் கானுக்கு பல கொலை மிரட்டல்கள் வந்துள்ள நிலையில், ஷாருக்கானுக்கும் இப்போது மிரட்டல் வந்துள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.