அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குழுமூர், பெரியாக்குறிச்சி, இலுப்பையூர் கிராமங்களிலும், குவாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருங்களாகுறிச்சி கிராமத்திலும் கொள்ளையர்கள் வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன.
இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க, அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் உத்தரவின் பேரில், அரியலூர் டிஎஸ்பி ரகுபதி மேற்பார்வையில், தளவாய் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜவேலு தலைமையில் ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷி வந்தியம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (34) என்பவரும், அவரது கூட்டாளியும் சேர்ந்து மேற்படி கொள்ளைச் சம்பவங்களில் 53 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீஸார், செந்துறை காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் ரிஷி வந்தியம் சென்று கிருஷ்ண மூர்த்தியைக் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து கிருஷ்ண மூர்த்தியிடம் விசாரணை நடத்திய தனிப்படை போலீஸார், அவரை இன்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். மேலும், அவரிடமிருந்து 32 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகளை போலீஸார் மீட்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ்,"தொடர் திருட்டில் ஈடுபட்ட கிருஷ்ண மூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள இவரது கூட்டாளியை தனிப்படை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கடந்த 2023ம் ஆண்டில் 131 குற்ற வழக்குகளில் ரூ.76,22,110 மதிப்புள்ள களவு போன நகைகளில் ரூ.48,27,810 மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டில், இதுவரை 97 வழக்குகளில் களவு போன ரூ.63,39,280 மதிப்புள்ள நகைகளில் ரூ.48,50,755 மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது" என்று செல்வராஜ் கூறினார்.