சென்னை | அண்ணா சாலையில் இளைஞரிடம் ரூ.5.45 லட்சம் வழிப்பறி


சென்னை: அண்ணா சாலையில் இளைஞரிடம் ரூ.5.45 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பெரம்பூர் ஜமாலியா ஸ்டீபன்சன் சாலை பகுதியைச் சேர்ந்தவர் கீர்த்தனன் (19). அண்ணா சாலை ரிச்சி தெருவில் தனது உறவினர் நடத்திவரும் கணினி பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இவர் வேலை செய்கிறார்.

இந்நிலையில், கீர்த்தனன் நேற்று முன்தினம் இரவு அவரது உறவினர் கூறியதன்பேரில், சவுகார்பேட்டையில் ஒரு நபரிடம் இருந்து ரூ.5.45 லட்சம் பணத்தை வாங்கி, ஒரு பையில் வைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் ரிச்சி தெரு நோக்கி வந்துள்ளார்.

ஜிம்கானா கிளப் பகுதியில் செல்லும்போது, அங்கு மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் கீர்த்தனனை வழிமறித்து நிறுத்தினர். அவர் சுதாரிப்பதற்குள், அவரது பணப் பையை பறித்துக் கொண்டு தப்பினர். திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

x