சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றி மோசடி செய்ததாக செவிலியர் அளித்த புகாரின் பேரில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர். சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வரும் 26 வயது இளம்பெண் ஒருவர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது: அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கவுதம் (29). மருத்துவரான அவரும், செவிலியரான நானும் அண்ணா நகரில் ஒரே மருத்துவமனையில் பணிபுரிகிறோம். இந்த நிலையில், கவுதம் என்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் கூறினார்.
இதனால், நாங்கள் இருவரும் ஒன்றாக வசித்தோம். பின்னர் நான் கருவுற்றேன். ஆனால், கவுதம் என்னை கருக்கலைப்பு செய்ய வைத்தார். திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி, மருத்துவர் கவுதம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.