ராமேசுவரம்: உச்சிப்புளி அருகே மூதாட்டியை கழுத்தை நெறித்துக் கொன்று கவரிங் நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்த நாரையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி (60). இவரது மகள் பிரியதர்ஷினி தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கணவர் கரோனாவில் உயிரிழந்த நிலையில் பிரியதர்ஷினி தனது இரண்டு குழந்தைகளுடன் தாயார் லட்சுமியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பிரியதர்ஷினியின் இரண்டு குழந்தைகளும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்த போது லட்சுமி இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அங்கு வந்த உச்சிப்புளி போலீஸார், லட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸாரின் விசாரணையில், நாகாச்சி கிராமத்தைச் சேர்ந்த மாரிஸ் குமார் (36) என்பவர், லட்சுமியிடம் அவரது மகளை திருமணம் செய்து வைக்குமாறு கேட்டதாகவும், அதற்கு லட்சுமி மறுப்பு கூறியதாவதாக தெரிகிறது.
இதனால் கோபம் அடைந்த மாரிஸ்குமார், லட்சுமியை கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, அவரது கழுத்தில் கிடந்த கவரிங் சங்கிலியை திருடி சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார் மாரிஸ் குமாரை இன்று கைது செய்தனர்.