தேனி அருகே அதிர்ச்சி: சிசிடிவியை ‘மறைத்து’ வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, கார் திருட்டு


உத்தமபாளையம்: உத்தமபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மற்றும் கார் திருடப்பட்டது. கொள்ளையர்கள் கண்காணிப்புக் கேமராவை பெயின்ட்டால் மறைத்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஆனைமலையான்பட்டி ஆர்.கே.கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (58). இவர் உள்ளூரில் அலோபதி மருந்தகம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனது மகன், மருமகள் வீட்டுக்கு தீபாவளி கொண்டாடுவதற்காக கடந்த 29-ம் தேதி தனது மனைவியுடன் கிளம்பிச் சென்றார். இந்நிலையில் இன்று ஊர் திரும்பினார்.

அப்போது வீட்டின் சுற்றுச்சுவர் இரும்புக் கதவு மற்றும் வீட்டின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. வெளியே நிறுத்தி வைத்திருந்த காரையும் காணவில்லை. இதையடுத்து வீட்டுக்கு உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கமும் திருடு போயிருந்தது. வீட்டில் இருந்த கார் சாவியை எடுத்து காரையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. உடனடியாக ராயப்பன்பட்டி காவல்துறையினருக்கு ராஜன் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து டிஎஸ்பி-யான செங்கோட்டுவேலன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா ஆய்வு செய்யப்பட்டது. அப்போது கேமராவில் காட்சிகள் பதிவாகாமல் இருக்க கருப்பு கலர் பெயின்ட்டை ஸ்பிரே செய்திருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம் தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அருகில் உள்ள பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x