ரந்தம்பூர் தேசிய பூங்காவில் 25 புலிகளை காணவில்லை: ராஜஸ்தானில் அதிர்ச்சி


ஜெய்ப்பூர்: ரந்தம்பூர் தேசிய பூங்காவில் (ஆர்என்பி) உள்ள 75 புலிகளில் 25 புலிகள் கடந்த ஆண்டில் காணாமல் போயுள்ளதாக ராஜஸ்தானின் தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் தெரிவித்தார்.

ஒரு வருடத்தில் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான புலிகள் காணாமல் போனதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. முன்னதாக, ஜனவரி 2019 முதல் ஜனவரி 2022 வரை ரந்தம்பூரில் இருந்து 13 புலிகள் காணாமல் போயிருந்தன. இதனையடுத்து காணாமல் போன புலிகள் குறித்து விசாரணை நடத்த மூவர் கொண்ட குழுவை வனவிலங்கு துறை அமைத்துள்ளது. இந்த குழு கண்காணிப்பு பதிவுகளை மதிப்பாய்வு செய்து, பூங்கா அதிகாரிகளின் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும்.

முதற்கட்டமாக, இந்த ஆண்டு மே 17 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில், காணாமல் போன 14 புலிகளை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவில், ‘பூங்காவின் கள இயக்குநருக்கு பல அறிவிப்புகள் அனுப்பப்பட்ட போதிலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. அக்டோபர் 14, 2024 தேதியிட்ட அறிக்கையின்படி, 11 புலிகள் ஒரு வருடத்திற்கும் மேலாக கணக்கில் வரவில்லை. மேலும் 14 புலிகளின் சான்றுகள் குறைந்த அளவிலேயே உள்ளன. சூழ்நிலைகளின் அடிப்படையில், ரந்தம்பூரில் காணாமல் போன புலிகள் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமை வனவிலங்கு காப்பாளர் பவன் குமார் உபாத்யாய் கூறுகையில், "இரண்டு மாதங்களுக்குள் குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும். சில கண்காணிப்பு இடைவெளிகளை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சமீபத்தில், நான் வாராந்திர கண்காணிப்பு அறிக்கைகளை சேகரிக்க ஆரம்பித்தேன், இந்த ட்ராப் கேமராக்களில் புலிகள் பதிவாகவில்லை. இந்த விஷயம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூங்காவின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான முயற்சியில், பாதுகாக்கப்பட்ட மண்டலங்களிலிருந்து கிராமங்களை இடமாற்றம் செய்வதும் அடங்கும். ஆனால் முன்னேற்றம் மெதுவாக உள்ளது, கடைசி இடமாற்றம் 2016 இல் நடைபெற்றது” என்றார்

x