சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை


ஈஸ்வரன்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கணியூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (35). கூலித்தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் பயிர்களை சேதப்படுத்தும் மயில்களை விரட்ட செல்வது வழக்கம்.

கடந்த ஆண்டு மே மாதம் அப்பகுதியை சேர்ந்த 10 வயது, 8 வயதுடைய சிறுவர்கள் 2 பேரை ஈஸ்வரன் தனியாக அழைத்துச்சென்று அவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சிறுவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், உடுமலை மகளிர் போலீஸார், போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று மாலை (நவ.5) இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி, சிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஈஸ்வரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரானார். இதையடுத்து ஈஸ்வரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

x