தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மோப்ப நாயுடன் போலீஸார் சோதனை


தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு சோதனை கருவிகள் மூலம் ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். | படம்: எம்.முத்துகணேஷ் |

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் முழுமையாக சோதனை மேற்கொண்டனர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அடுத்து, முக்கிய ரயில் நிலையமாக தாம்பரம் உள்ளது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று காலை 10.45 மணிக்கு 2 நபர்கள், வெடிகுண்டு வைப்பது தொடர்பாக திட்டமிடும் வகையில் இந்தியில் பேசிக் கொண்டு இருந்ததாக குமார் என்பவர் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தாம்பரம் ரயில்வே போலீஸார், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள், நடைமேடை என அனைத்திலும் முழுமையாக சோதனை செய்த நிலையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே அந்த தொலைபேசி அழைப்பு புரளி என தெரியவந்தது.

தொலைபேசியில் பேசியவரின் எண்ணைக் கொண்டு போலீஸார் விசாரணை மேற்கொண்ட போது நந்திவரம் - கூடுவாஞ்சேரி, கோவிந்தராஜபுரம் பகுதியைச் சேர்ந்தகாதர் ஹுசைன் மகன் ஷஃபியுல்லா என்பது தெரிந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தாம்பரத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.தாம்பரம் ரயில் நிலையத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, வெடிகுண்டு சோதனை கருவிகள் மூலம் ரயில் நிலையம் முழுவதும் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.

x